அயோத்திதாசர் : சமூக விடுதலையின் முன்னோடி!

தலித் மக்களுக்கு மட்டுமல்லாமல் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான தலைவர்கள் என்று பலருக்கு ஆதர்சமாக இருப்பவர் அயோத்திதாசப் பண்டிதர். புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் காலப்போக்கில் தலித்களாக்கப்பட்டார்கள் எனும் கருத்து கொண்டவர் அவர்.
இதுதொடர்பாகப் பல கட்டுரைகளையும் எழுதியவர். ஆரியர்களுக்கு எதிராகத் திராவிடர்கள் எனும் பதத்தைப் பயன்படுத்தியதுடன், திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்னோடியாகவும் இருந்தவர். 19-ம் நூற்றாண்டில் புரட்சிகரமான கருத்துகளைத் துணிச்சலுடன் முன்வைத்தவர். இதழாசிரியர், சமூக சேவகர், தமிழ் அறிஞர், சித்த மருத்துவர் என்று பல முகங்களைக் கொண்ட ஆளுமை அவர்.
1845 மே 20-ல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நல்ல கல்விப் பின்புலம் கொண்ட தலித் குடும்பத்தில் பிறந்தார் அயோத்திதாசர். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் காத்தவராயன். இவரது தாத்தா கந்தப்பன் ஜார்ஜ் ஹாரிங்டன் எனும் ஆங்கிலேயரிடம் பணிபுரிந்தவர். தன்னிடம் சேகரிப்பில் இருந்த திருக்குறள் படிகளை எல்லிஸ் துரையிடம் வழங்கியவர் கந்தப்பன். நீலகிரிக்குக் குடிபெயர்ந்த அயோத்திதாசர், தோடர் இன மக்களை ஒன்றிணைத்து ‘அத்வைதானந்த சபை’ எனும் அமைப்பை உருவாக்கினார்.
சாதிய ஒடுக்குமுறைகளுக்கு தலித் மக்கள் ஆளாவதைக் கடுமையாக எதிர்த்தார். இந்து மதம் தலித் மக்களைச் சாதியரீதியாக ஒடுக்குவதாகக் கருதிய அவர், இந்து மதத்தைத் தாண்டி தலித் மக்களை அடையாளப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். ஆதித் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று கூறியவர் அவர். பின்னாட்களில் புத்த மதத்தைத் தழுவிய அவர், தலித் மக்களும் புத்த மதத்தைத் தழுவ வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சென்னையில் தலித் குழந்தைகளுக்காகப் பள்ளி நடத்திவந்த டி.ஜான் ரத்தினத்தின் தொடர்பு அயோத்திதாசரின் சிந்தனைகளை மேலும் வளர்த்தது. ஜான்ரத்தினம் நடத்திவந்த ‘திராவிடப் பாண்டியன்’ எனும் இதழில் அயோத்திதாசர் பணி புரிந்தார். பின்னாட்களில் (1907-ல்) ‘ஒரு பைசா தமிழன்’ எனும் இதழை நடத்த இந்த அனுபவம் அவருக்குப் பெரிதும் உதவியது.
சென்னை ராயப்பேட்டையில் அச்சாகி புதன்கிழமைதோறும் வெளியான இந்த இதழில், புத்தமதம் குறித்துப் பல கட்டுரைகளை எழுதினார். அடக்குமுறைகளுக்குக் காரணமான சாதிய அமைப்பைக் கண்டித்தார். ‘அரிச்சந்திரன் பொய்கள்’, ‘திருவள்ளுவர் வரலாறு’, ‘புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி’ உட்பட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். வாழ்நாளின் இறுதிக் காலத்தில் திருக்குறளுக்கு உரை எழுதும் பணியில் ஈடுபட்டார்.
சமூக விடுதலைக்காகப் போராடிய பல தலைவர்களுக்கு முன்னோடியாக இருந்த அயோத்திதாசர், 1914-ல் தனது 69-வது வயதில் காலமானார்.