படித்ததில் பிடித்தது கொஞ்சம் படிப்பு... கொஞ்சம் காபி விற்பனை : கண்ணிழந்த மாணவியின் கம்பீரம்

கொஞ்சம் படிப்பு... கொஞ்சம் காபி விற்பனை : கண்ணிழந்த மாணவியின் கம்பீரம்

பதிவர்: நிர்வாகி, வகை: படித்ததில் பிடித்தது  
படம்

மதுரை லேடிடோக் கல்லுாரியில் 'காபியா சார்... 7 ரூபாய்' பாந்தமாய், பணிவாய் கேட்கும் குரலுக்கு சொந்தக்காரர் கண்ணிழந்த கல்லுாரி மாணவி நித்யா தான்.எம்.ஏ. வரலாறு முதலாண்டு படிக்கும் நித்யா, மதுரை பனங்காடியைச் சேர்ந்தவர்.

இதே கல்லுாரியில் பி.ஏ வரலாறு முடித்தபின் வாழ்க்கை கேள்விக்குறியாகி நின்றார். கல்லுாரி நிர்வாகத்தின் கருணையால் அந்த வளாகத்திலேயே, அரசு நிதியுதவியுடன் காபி, டீ விற்கும் இயந்திரம் அமைத்து நித்யாவிடம் தர, அதை கெட்டியாய் பிடித்துக் கொண்டார். இரண்டாண்டுகளாக டீ, காபி விற்றுக் கொண்டே, தற்போது முதுநிலை படிப்பில் சேர்க்கையும் பெற்றுள்ளார்.

அதுகுறித்து நித்யா கூறியதாவது:

அப்பா மொக்கையன், விவசாயி, அம்மா பிச்சையம்மாள் குடும்பத்தலைவி. இரண்டு அண்ணன்கள். அவர்களுக்கு பார்வையில் பிரச்னையில்லை. அக்கா மீனாட்சிக்கு முழுமையாக பார்வை தெரியாது. எனக்கு இரவில் ஓரளவு பார்வை தெரியும். என் நிலையை புரிந்து கொண்ட கல்லுாரி நிர்வாகம், விடுதியில் இலவசமாக தங்க உதவி செய்தது. தற்போது எம்.ஏ., வரலாறு முதலாண்டு சேர்ந்துள்ளேன்.

காபி, டீ விற்ற காசில், படிப்புக்கான கட்டணம் மட்டும் செலுத்துவேன். காலை 9.30 முதல் 11.30 மணி வரை வகுப்பு. அதுவரை என் கல்லுாரி தோழிகள் ஐந்துபேர் இங்கே நின்று விற்பனை செய்வர். இடைவெளியில் நான் தொடர்வேன். மாலை 5 மணி வரை விற்பனை. ஒரு கப் விற்றால் கமிஷன் முறையில் காசு கிடைக்கும். படித்து முடித்தபின் பி.எட்., படித்து ஆசிரியராக வேண்டும். என் மூலம் பெற்றோரும், அக்காவும் சந்தோஷப்பட வேண்டும் என்றார்.

காபி கேட்போருக்கு கரிசனமாய் கொடுத்து கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் 10 ரூபாயாக தர, ' ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் சில்லரை கொடுங்க பிளீஸ்' என்கிறார். இவரின் நிலையை பார்த்து பரிதாபப்படுவர்கள் ' சில்லரை வேண்டாம்' என்றாலும், 'ஒருநிமிடம்...' என்றவாறே சில்லரையை கொடுத்து விடுகிறார்.

சரியான தொகையை மட்டும் வாங்கிய நித்யா... விழியிருந்தும் நெறிபிறழ்ந்து வாழ்வோருக்கு ஒரு பாடம் தான்

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்