பாரம்பரியம் இருக்க பயம் ஏன்?

ஜூலை.04, 2015:- நூடுல்ஸ் ஒன்றும் நமது பாரம்பரிய, அத்தியாவசிய உணவுப் பொருள் கிடையாது. நூடுல்ஸுக்கு மாற்றாக எத்தனையோ சத்தான உணவு வகைகள் இருக்கின்றன என்கிறார் உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன்...
‘‘பாரம்பரிய உணவு வகைகளை விடவும், நூடுல்ஸ் போன்ற நவீன துரித உணவுகள்தான் குழந்தைகளுக்குப் பிடிக்கும் என பெற்றோர்களே நினைத்துக் கொள்கின்றனர். இதனால் சத்தான உணவுகளை சமைத்துத் தருவதில்லை. நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளில் மாவுச்சத்து, கொழுப்பு சத்து ஆகியவை மட்டுமே இருக்கின்றன. காய்கறிகளும் மிகவும் குறைவான விகிதத்தில்தான் சேர்க்கப்படுகின்றன. இது போன்ற துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருகிற குழந்தைகள் பருமன் பிரச்னைக்கு ஆளாகிறார்கள்.
கேழ்வரகு தோசை, கம்பு தோசை, ஊத்தப்பம் போன்ற பாரம்பரிய உணவு வகைகளை சமைத்துக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும். கேழ்வரகு, கம்பு மாவை முதலிலேயே அரைத்து வைத்துக்கொண்டால், தேவைப்படும்போது ஐந்தே நிமிடத்தில் தோசை, ஊத்தப்பம் ஊற்றிக் கொடுக்கலாம். கோதுமை மாவுடன் முருங்கைக்கீரை சேர்த்து அடை செய்து, தொட்டுக்கொள்ள தேங்காய், வெங்காயம், தக்காளி சட்னி அரைத்துக் கொடுக்கலாம்.
இந்த உணவுகளைக் குழந்தைகள் ஆர்வத்துடன் விரும்பிச் சாப்பிட வேண்டுமெனில், அவற்றின் மீது புதினா இலைகள், சீஸ் தூவி கொடுக்கலாம். ஊத்தப்பத்தில் பட்டாணி கலந்து கொடுக்கலாம். நம்முடைய பாரம்பரிய உணவுகளில் புரதம், சுண்ணாம்பு, இரும்பு ஆகிய சத்துகள் ஏராளமாக உள்ளன. அதனால் நூடுல்ஸ் போன்ற துரித உணவுக்கு குழந்தைகளை இரையாக்கத் தேவையில்லை.’