ஒலிம்பிக் பதக்கம் பகல் கனவா? : வீரர்களின் சோகம்

ஜூலை.11, 2015:- நமது நாட்டு மக்கள் தொகையை கணக்கில் எடுத்தால், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் நமக்கு கிடைக்கும் பதக்கங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதற்கு காரணம், நமது வீரர்களுக்கு திறமை குறைவு என்பது அல்ல. அவர்களுக்கு கிடைக்காத பல வசதிகள் தான்.ஒலிம்பிக்கில் கிடைத்தால் வெள்ளியோ, வெண்கலமோ தான். தங்கப் பதக்கம் மட்டும் இன்னும் பகல் கனவாகவே இருக்கிறது. இதை சரி செய்வது எப்படி?
சில வீரர்களின் அனுபவங்கள், நமது வேதனைகளுக்கு விளக்கமாக அமைகின்றன.
லலிதா பாபர் - மகாராஷ்டிராவில் மோகி என்ற கிராமத்தை சேர்ந்த வீராங்கனை. 3000 மீட்டர் ஸ்டீபில் சேசிஸ் போட்டிக்கு ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார். தற்போது ஊட்டியில் பயிற்சி பெற்று வருகிறார்.
சர்வதேச களத்தில் ஓடுவதற்கு இவருக்கு நல்ல ஷூ இல்லை. இதன் விலை 10 ஆயிரம் ரூபாய் ஆகும். இவ்வளவு விலை கொடுத்து ஷூ வாங்க இவரிடம் வசதி இல்லை. ஆனால் அரசும் இவருக்கு இந்த ஷூவை சப்ளை செய்யவில்லை. பிறகு எப்படி இவரிடம் சாதனையை நாம் எதிர்பார்க்க முடியும்?
இது குறித்து அவர் கூறும்போது, ""ஷூவை நாங்களே வாங்க வேண்டும். 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினாலும் ஒரு மாத பயிற்சிக்கு தான் அது தாங்கும். மீண்டும் இன்னொரு ஜோடி வாங்க வேண்டும். என்னால் எப்படி இவ்வளவு செலவழிக்க முடியும்?. இந்தியாவில் ஸ்டீபில் சேசிஸ் போட்டிக்கான ஷூக்கள் கிடைப்பதில்லை. வெளிநாட்டு ஷூ தான் வாங்க வேண்டும். மொத்தமாக 6 ஜோடிகளை வாங்கி வைக்க வேண்டி உள்ளது.
இப்போது தான் ஒரு தன்னார்வ நிறுவனம், எனது ஷூ செலவை ஏற்றுக்கொள்ள முன் வந்துள்ளது. ஷூவுக்காக என் வங்கி கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளது'' என்கிறார்.
இன்னொரு சோகம்:
லலிதா கதை இதுவென்றால், சவும்யாஜித் கோஷ் கதை வேறு மாதிரியானது. டேபிள் டென்னிஸ் வீராங்கனையான இவர், ஸ்வீடனில் 8 மாதங்களுக்கு பயிற்சி பெறுகிறார். அவர் சொல்வதை கேளுங்கள்:
""ஸ்வீடனில் எனக்கு தனிப்பயிற்சியாளர் இருக்கிறார். அவருக்கு மாத சம்பளம் ரூ.1 லட்சம் தர வேண்டும். பயிற்சிக்கு அனுமதி மட்டும் தரும், டேபிள் டென்னிஸ் சம்மேளனம், இந்த சம்பளத்தை தருவதில்லை. நானும் என் பெற்றோரும் இந்த செலவை சமாளித்து வருகிறோம். சாதாரண நடுத்தர வர்க்கமான எங்களால் இதை எப்படி தர முடியும்'' என கேள்வி எழுப்புகிறார்.
இவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே. இன்னும் நிறைய வீரர்களின் கதை இது தான்.
இக்குறைகளை தீர்க்காதது வரை, ஒலிம்பிக் பதக்கம் என்பது நமக்கு எட்டாக் கனியாகவே இருக்கும்.