நிலம் கையக மசோதாவை கைவிட 3 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

ஜூலை.26, 2015:- நிலம் கையக மசோதா தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம், அந்த மசோதாவை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக, திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இந்தக் கருத்தை வலியுறுத்தி, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளன. காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை நடைபெறவுள்ள குழுவின் கூட்டத்தில் சில திருத்தங்களை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ""நிலம் கையக மசோதாவை முழுமையாகக் கைவிட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்'' என்றார்.
இதுதொடர்பாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
நிலம் கையக மசோதாவை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று மேற்கு வங்க சட்டப்பேரவையில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தகவலை திரிணமூல் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் சுட்டிக்காட்டியது.
எனினும், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றை நிறுவுவதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டால், நில உரிமையாளர்களுக்கு லாபத்தில் பங்கு தர வேண்டும் என்ற திருத்தத்தை பிஜு ஜனதா தளம் முன்வைத்துள்ளது. மேலும், விவசாயிகளிடம் ஒப்புதல் பெறும் பிரிவு தொடர்பான திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்துள்ள கருத்தில், விவசாயிகளுக்கு நில மதிப்பு தொடர்பான சந்தை விலையில் 4 மடங்கு அதிகம் தரும் விஷயத்தில், நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் ஒரே மாதிரியான அளவுகோலைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.
மேலும், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்போது, அதை எதிர்க்கட்சிகள் ஒருமனதாக தோற்கடிக்கும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
துறைவாரியான நிலைக்குழுக்கள், நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழுக்கள் ஆகியவற்றில் இருந்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு வேறுபட்டதாகும். அதன் உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசு பரிந்துரைக்கும் திருத்தங்களுடன் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
அதன் பிறகு, மசோதாவின் பிரிவுகள் வாரியாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். விவாதத்தில் ஒருமித்த கருத்து நிலவினால், மசோதா நிறைவேற்றப்படும். ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், வாக்கெடுப்பு நடத்தப்படும்.
30 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ள நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில், 11 பேர் பாஜக உறுப்பினர்கள் ஆவார்கள். மசோதாவை கூட்டுக் குழு ஏற்பதற்கு, 16 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாகும்