இந்தியா கருப்பு பணத்தை கட்டுப்படுத்த கல்வி நிறுவனங்கள், மத அமைப்புகளுக்கான நன்கொடைக்கு புதிய கட்டுப்பாடு

கருப்பு பணத்தை கட்டுப்படுத்த கல்வி நிறுவனங்கள், மத அமைப்புகளுக்கான நன்கொடைக்கு புதிய கட்டுப்பாடு

பதிவர்: நிர்வாகி, வகை: இந்தியா  
படம்

ஜூலை.26, 2015:- வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கருப்பு பணத்தை மீட்க சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா செயல்பட்டு வருகிறார். கருப்பு பணத்தை ஒழிப்பது தொடர்பாக, அக்குழு தனது 3-வது அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் பல்வேறு அதிரடி யோசனைகளை தெரிவித்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-         

கிரிக்கெட் போட்டிகளில், குறிப்பாக ஐ.பி.எல். பந்தயங்களில் கிரிக்கெட் சூதாட்டம் பெருமளவில் நடக்கிறது. அதில் கருப்பு பணம்தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே, கருப்பு பணத்தை கட்டுப்படுத்த, சட்டவிரோத காரியமான கிரிக்கெட் சூதாட்டத்தை, உறுதியான சட்டங்கள் மூலம் தடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள், மத அமைப்புகள், அறக்கட்டளைகள் ஆகியவற்றுக்கு நன்கொடைகள் அளிப்பதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். ஆனால், அப்பணம் கணக்கில் காட்டப்பட்ட பணமாக இருக்க வேண்டும்.          

இப்போதெல்லாம், நன்கொடை என்ற பெயரில், கருப்பு பணத்தை அளிப்பதும், பெறுவதும் பெருமளவில் நடக்கிறது. கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் நன்கொடை அளிப்பவர்கள் கூட இருக்கிறார்கள். இப்படி கருப்பு பணத்தை நன்கொடையாக கொடுத்தால், அதை கொடுப்பவர் மீதும், பெறுபவர் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டும். இதற்காக, சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும்.         

எனவே, மேற்கண்ட அமைப்புகளுக்கு பெரிய அளவில் நன்கொடை அளிப்பதாக இருந்தால், வங்கி காசோலையாகவே அளிக்க வேண்டும். நகைகளை பரிசாக அளிப்பதாக இருந்தாலும், அதைக் கொடுப்பவரின் பெயரும், ‘பான்’ எண்ணும் குறிப்பிடப்பட வேண்டும்.          

ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல், கைவசம் ரொக்கப்பணத்தை வைத்திருக்கக் கூடாது என்று ஏற்கனவே யோசனை தெரிவித்தோம். கருப்பு பணத்தை கட்டுப்படுத்த இந்த விதிமுறையை அமல்படுத்த வேண்டும். அப்படி அமல்படுத்தினாலே, கருப்பு பண புழக்கத்தை பெருமளவு தடுத்து விடலாம். வெளிநாட்டில் கருப்பு பணம் பதுக்குவதையும் தடுக்கலாம்.        

வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு, ‘பங்கேற்பு குறிப்புகள்’ என்ற வழிமுறையை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதன் உண்மையான பயனாளிகள் யார் என்று தெரிவதில்லை. கருப்பு பண புழக்கத்துக்கு இது வழிவகுக்கிறது.          

உதாரணமாக, கேமன் தீவு என்ற நாட்டில் இருந்து பங்கேற்பு குறிப்பு மூலமாக இந்தியாவில் ரூ.85 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டின் மக்கள்தொகையே வெறும் 54 ஆயிரம்தான். எனவே, அங்குள்ளவர் பயனாளியாக இருக்க வாய்ப்பில்லை.          

இதுபோன்று, பங்கேற்பு குறிப்புகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க அதன் உண்மையான பயனாளி விவரத்தை பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) சேகரிக்க வேண்டும். இதற்காக உறுதியான விதிமுறைகளை வகுக்க வேண்டும். பங்குச்சந்தைகளில் பங்கு மதிப்புகள் செயற்கையாக உயர்ந்தால், அதை கண்காணிக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய முதலீட்டாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.          

சில நிறுவனங்கள், வரி ஏய்ப்பு செய்து, கருப்பு பணத்தை குவிப்பதற்காக, போலி நிறுவனங்களை உருவாக்குகின்றன. அதை கட்டுப்படுத்த வேண்டும். அந்நிறுவனங்கள் பற்றி மத்திய நேரடி வரி வாரியத்துக்கும், நிதி புலனாய்வு பிரிவுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.         

இவ்வாறு சிறப்பு புலனாய்வு குழு கூறியுள்ளது

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்