கட்டுரைகள் இனிமேலும் வெறும் பட்டதாரிகள் தேவையில்லை - பேராசிரியர் க. பழனித்துரை

இனிமேலும் வெறும் பட்டதாரிகள் தேவையில்லை - பேராசிரியர் க. பழனித்துரை

பதிவர்: நிர்வாகி, வகை: கட்டுரைகள்  
படம்

நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி, இன்று உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளிநாட்டில் வாழும் நம் இந்தியர்கள், தங்கள் துறைகளில் சாதிக்கும் சாதனைகள் இந்தியர்களின் மதிப்பை உலகத்தில் உயர்த்துகிறது. இந்த மரியாதையை தகுதிப்படுத்திக் கொள்ள என்ன செய்யப் போகிறோம் என்பது தான் இன்று நம் முன் உள்ள கேள்வி.

மக்கள் தொகை பெருக்கம் என்பது நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அது இன்று செல்வமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள, 35 வயதுக்கு உட்பட்ட, 65 கோடி இளைஞர்களை பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், தொழிற்திறன் மிக்கவர்களாக மாற்றி தொழிற்சாலைகளுக்கும், சேவைத்துறைக்கும், விவசாயத்திற்கும் அனுப்ப வேண்டும்.

ஐந்தாண்டு காலத்திற்கு, ஓர் இயக்கம் போல் செயல்பட்டால், இந்தியாவின் வீச்சு உலகம் வியக்கும் வண்ணம் இருக்கும். பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளில், தொழில் கல்வியை நடைமுறைப்படுத்தி அதன் மூலம் பொருளாதாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனர். அந்தத் தொழில்கல்விக்கான கொள்கை மற்றும் சட்டம், அதை நடைமுறைப்படுத்த விரிவான திட்டச் செயல்பாடுகள் என அனைத்தும், அங்கு உள்ளன.

நாம் இன்னும் இந்த தொழிற்கல்வியில் மிகவும் தாழ்நிலையில் இருக்கிறோம். அதே நேரத்தில், 65-லிருந்து, 70 கோடி இளைஞர்கள் இந்த நாட்டில் வலுவாக மக்கள்தொகையில் இருக்கின்றனர். இந்த மனித வளத்தை வைத்துப் பொருளாதாரத்தை மேம்படுத்த உள்ளது என்பதை அனுமானிக்க முடிகிறது. இந்த இளைஞர் கூட்டம் தொழில்கல்வி நோக்கி நகர்ந்து நாட்டுக்கும், உலகத்திற்கும் தேவையான தொழிற்கல்வியை பெற்றுவிட்டால், இந்தியா வின் வளர்ச்சியை ஒருவராலும் வீழ்த்த முடியாது.

மத்திய அரசு இதற்கான கொள்கையை வகுத்துள்ளது, அதற்கான பூர்வாங்க ஆலோசனை மற்றும் அமைப்புகளை உருவாக்கி உள்ளது. இந்தச் செயல்பாடுகளுக்கான நிதியத்தையும் உருவாக்கியுள்ளது. பதினேழு அமைச்சகங்கள் இந்தப் பணியை எப்படி செய்ய வேண்டும் என்ற திட்டத்தையும் உருவாக்கியுள்ளது. இவையனைத்தும் வழிகாட்டல்கள் தான்.

இதை நடைமுறைப்படுத்துவது என்பது மாநிலங்களின் கையில்.எனவே, ஒவ்வொரு மாநில அரசும் இந்த முக்கியத்துவத்தை உணர்ந்து, நடவடிக்கைகளை மத்திய அரசு நிர்ணயிக்கிற இலக்குகளை அடைய விழிப்புணர்வுடனும், ஆர்வத்துடனும் புரிந்து செயல்பட்டால், நாம் அடைய நினைக்கும் இலக்கை அடைந்து விடலாம்.இன்றைய சூழலில் நமக்குத் தேவையான பணியாட்களையே நம்மால் தயார் செய்ய முடியாத சூழலில் நாம் இருக்கிறோம்.

50 கோடி பணியாட்கள் இந்திய நாட்டுக்கு மட்டும் தேவை. பணியாளர்களுக்குத் தேவையான தொழிற்கல்வியை, 2022ம் ஆண்டுக்குள் அளித்து அவர்களைத் தயார் செய்து விட வேண்டும். அதுதான் திட்ட இலக்கு.ஆனால், நம்மால் இன்றுள்ள கல்வி நிலையங்களாலும், பயிற்சி நிறுவனங்களாலும், 15 கோடி பணியாளர்களை மட்டும்தான் உருவாக்க முடியும் என்பதுதான் எதார்த்தமான உண்மை. இந்தச் சூழலில் நம் இளைஞர்களை எப்படி தொழிற்திறன் மிக்கவர்களாக ஆக்கப்போகிறோம் என்பதுதான் நம் முன் உள்ள மிகப்பெரிய சவால்.

மேற்கத்திய நாடுகளில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட கல்வித்திட்டத்தை, நம் கல்விக்கூடங்களில் நடைமுறைப்படுத்தினாலே, மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெறமுடியும். இதன் மூலம் நம் பொருள் உற்பத்தித்திறன் கூடும், உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் தரம் கூடும், நம் தொழிலாளர்களின் சம்பளம் உயரும், வறுமை குறையும், வாழ்க்கைத் தரம் உயரும். சிறு குறு தொழில்களின் வருமானமும் லாபமும் கூடும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக நம் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் குறையும். இதன் மூலம் சமூகப்பிரச்சனைகள் குறையும்.

தற்போதைய நம் கல்வித் திட்டத்தில் உள்ள குறைபாடுகள், நம் இளைஞர்களை தொழிற்திறன் உள்ளவர்களாக ஆக்க முடியவில்லை. இதுவரை நாம் பட்டதாரிகளை உயர் கல்விச்சாலைகள் மூலம் உருவாக்கி வந்தோம். ஆனால் இன்று நமக்குத் தேவை பட்டதாரிகள் அல்ல, தொழிற்திறன் கூட்டப்பட்ட இளைஞர்கள். எனவே, நம் கல்விக்கூடங்களில் பட்டதாரிகளை உருவாக்கும் பணி என்பதை இனிமேலும் நீடிக்க அனுமதிக்க முடியாது.


gpalanithurai@gmail.com

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்