சொத்துக் குவிப்பு மேல் வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது - உச்ச நீதிமன்றம்

ஏப்.27, 2015:- சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதேநேரத்தில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் மறு விசாரணை தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு தெளிவுபட தெரிவித்துள்ளது.
பவானி சிங் நியமனம் குறித்த இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் அடங்கிய அமர்வு இன்று காலை வழங்கியது.
அப்போது நீதிபதிகள், "பவானி சிங்கை, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை நியமித்திருக்கிறது. வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெறுவதால் அங்குள்ள நீதிமன்றமே அரசு வழக்கறிஞரை நியமித்திருக்க வேண்டும். அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், இவ்வழக்கில் மறு விசாரணைக்கு அவசியமில்லை" என தெரிவித்துள்ளனர்.
மேலும் நீதிபதிகள் கூறும்போது, "மனுதாரர் க.அன்பழகன், 90 பக்கங்களுக்குள் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும், கர்நாடக அரசு 50 பக்கங்களுக்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை நாளை (ஏப்ரல் 28-க்குள்) தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் மற்றும் கர்நாடக அரசும் எழுத்துமூலம் அளிக்கும் வாதத்தை பெற்றுக் கொண்டு தீர்ப்பளிக்கவும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராகி வாதாடினார்.
அவரது நியமனமே செல்லாது என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இரண்டு நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பை அளித்ததால், இவ்வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.
மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘உச்ச நீதிமன்றத்தால் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்ட ஒரு வழக்கில், அந்த மாநில அரசுதான் அரசு வழக்கறிஞரை நியமிக்க முடியும். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லாது’ என்று வாதிடப்பட்டது. ‘வழக்கின் விசாரணை அமைப்பு என்ற முறையில் அரசு வழக்கறிஞரை நியமிக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு’ என்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வாதிடப்பட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதியன்று, சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, அவர்கள் அனைவருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடியும் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, ஜெயலலிதா ஜாமீனில் வெளிவந்தார். அவர் தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி தலைமையில் நடந்து வருகிறது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பு எப்போது?
பவானி சிங் நியமனத்துக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. வழக்கில், தீர்ப்பு வழங்க நீதிபதி குமாரசாமிக்கு மே 12 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், மே 12-க்குப் பிறகே தீர்ப்பு வெளியாகும் என கர்நாடக நீதிமன்ற வட்டாரம் தெரிவிக்கிறது.
அதேவேளையில், பவானி சிங் நியமன வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு குறித்து கர்நாடக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.