மனிதம் மறந்த கல்வி!

கடந்த, 1990களில் ஆரம்பித்த தகவல் தொழில்நுட்ப புரட்சி, நம் கல்வித் திட்டத்தை மறு சீரமைத்தது என்று கூறினால் அது மிகையாகாது. தகவல் தொழில் துறை இன்று மிகப் பிரமாண்டமாக உருவெடுத்து, அனைத்துத் துறைகளிலும் காலுான்றி இன்றியமையாத சக்தியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. கல்வித் துறையும் இதற்கு ஓர் விதி விலக்கல்ல.
கல்வி என்றால் அது தகவல் தொழில் நுட்பம் சார்ந்ததாக இருந்தால் மட்டுமே சிறக்க முடியும் என்ற கருத்தும் இன்று சமுதாயத்தில் வளர்ந்து, வேரூன்றி இருப்பதும் வருந்தத்தக்க ஓர் நிகழ்வேயாகும். மனிதநேயம், அடிப்படை அறிவியல், கலை, பண்பாடு, மொழியியல் மற்றும் இலக்கியம் சார்ந்த புலன்களில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கையும் இதற்குச் சரியான ஓர் எடுத்துக்காட்டு. தொழில் நுட்ப வளர்ச்சி துவங்கி, 20 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், சமுதாயத்திற்கும், மானுடத்திற்கும் கல்வித்துறை மூலமாக இதனால் என்ன பயன் கிட்டியது என்பது போன்ற பல வினாக்கள் இன்று எழுப்பப்படுகின்றன.
இந்த சூழலில் கல்வித்துறை தன்னை மேம்படுத்திக் கொண்டதா என்ற கேள்வியும் ஒருபுறம் எழுகிறது.தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் அடைந்த நற்பலன் என்பன ஒருபுறம் இருந்தாலும், கல்வித் துறையும், இந்த தலைமுறையும் எதையோ இழந்து விட்டது போன்ற ஓர் நெருடல் இருப்பது ஒருவகையில் உண்மையே எனலாம்.
விவாதிப்போம்... ஏனெனில், சுயபரிசோதனைக்கு இதுவே மிகச் சரியான நேரம். கல்விச்சாலைகள் இன்று தெளிவான லாப நோக்கத்துடனேயே துவங்கப்படுகின்றன. தொழிற் கல்வியின் தேவை ஒருபுறம் இருந்தாலும், மேற்கூறிய கலை மற்றும் இலக்கியத் துறைகள் பின்னடைவு அடைந்திருப்பது நிச்சயமாக ஒரு நல்ல அடையாளம் அல்ல. அரசு பள்ளிகளிலும் இன்று தொழிற் கல்விக்குக் கிடைக்கும் முக்கியத்துவம், தாய் மொழி பயில்தலுக்குக் கிட்டாதது மிகவும் வருந்தத்தக்க நிலை. இதற்கான காரணம் எதுவென ஆராயும் போது, பெற்றோரின் ஆங்கில மோகமும், தங்கள் பிள்ளைகள் தொழில் அல்லது மருத்துவத்துறையில் புகுந்து பெரும்பொருள் ஈட்ட வேண்டும் என்ற ஆசை (பேராசை)யும் தான் மூலகாரணங்கள் எனலாம்.
தனிப்பட்ட எந்த ஒரு மனிதனும் தன் குடும்பம் மற்றும் பிள்ளைகள் குறித்து தன்னுடைய குறிக்கோள்களை வகுத்துக் கொள்வது இயல்பு தான். ஆனால், தமிழ் மாந்தர் யாவரும் இதே நோக்கில் பயணிக்க ஆரம்பித்தால், இவ்வுலகிலேயே மிகத் தொன்மையான மொழியாம் நம் தமிழ் மொழி மற்றும் அது சார்ந்த கலாசாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை கற்பவர் யார், கற்பிப்பவர் யார்? நம் இலக்கியங்களில் புதைந்து இருக்கும் உன்னத கூற்றுக்களையும், ஆழ்ந்த சிந்தனைகளையும் இந்த தலைமுறை பயில்வது இனி எக்காலம்?
இந்தக் கூற்றைப் படிப்பவர்கள், இது ஏதோ வெறும் ஒரு மொழி வெறி பிதற்றல் என்று கூட முடிவு செய்யலாம். ஆனால் இன்றைய நிகழ்வுகள் இந்த பிதற்றலிலும் ஒரு நியாயம் இருப்பதை உணர்த்தும். தொழில் மற்றும் தொழில் நுட்பம் வளர்ந்து என்ன பயனை நாம் கண்டு விட்டோம்? புலம் பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதைக் காண்கிறோம்.
புலம் பெயரும் நோக்கத்தில் தொழிற்கல்வி கற்பவர்கள் பெரும்பாலும் தங்கள் இணக்கத்தை பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு அர்ப்பணிக்கின்றனரேயன்றி இந்த நாட்டுக்கோ, தங்கள் மொழிக்கோ, தங்கள் நன்றியுணர்வை காட்டுவது இன்று குறைந்து வருகிறது.
தொழிற் கல்வி வளர்ச்சி, மதிப்புக் கல்வியின் அவசியத்தை குறைத்து விட்டது என்பதை யாரும் மறுக்க இயலாத உண்மை. இதோடு புதைந்து போனது, மானுடமும், மொழி நேயமும் தான்.
தொழில் நுட்ப பள்ளி மாணவர்களின் கைகளில் உள்ள மடிக்கணினி அல்லது அலைபேசியில் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும், கையடக்கத்தில் கொண்டு சேர்க்கும் தன்மை வாய்ந்தது.மாணவன் ஒருவன் அலைபேசியில் நீலப் படம் பார்த்து கொண்டு இருந்த போது சிலிப்புற்று, எதிரே வந்த பிஞ்சு மாணவி ஒருத்தியை சிதைத்தது, இன்றைய நாளின் கொடுமை.
காதலை ஏற்க மறுத்த பெண்ணின் முகத்தில் அமிலம் வீசும் கொடுமை கள் அதிகரித்து வருவதும், இந்தத் தொழில் நுட்ப வளர்ச்சியதின் காலகட்டத்தில் தான்.
தாய், தந்தையர் மீதுள்ள பாசமும், பெரியவர்கள் மீதான மதிப்பும், மரியாதையும் குறைந்து, பெருநகரங்களில் புற்றீசல் போல் வளர்ந்து வரும் மூத்த குடிமக்களுக்கான காப்பகங்களும் இன்றைய தலைமுறையின் சகிப்பு தன்மையற்ற, நன்னடத்தையற்ற வாழ்க்கை முறைக்கான உதாரணங்களில் ஒன்று. பணம் ஒன்றே வாழ்க்கை என்ற இலக்கு நோக்கி பயணம் செய்யும் போது, பாசத்திற்கும், மானுடத்திற்கும், மனித நேயத்திற்கும் இங்கே என்ன வேலை என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
தவறு என்பது இங்கே, இந்நாளில் துவங்கியது அல்ல! பெற்றோரின் பேராசையில், சிறு வயது முதல் பள்ளிகளில் நாம் புகுத்திய ஆங்கில மோகத்தாலும், தொழிற் கல்விக்கு நாம் கொடுத்த முக்கியத்துவத்தாலும், அதன் பொருட்டு அழிந்து போன மானுடம், மனிதநேயம் மற்றும் மதிப்பு சார் கல்வியும் காரணிகளாக இருக்கலாம்.
மறைந்து வரும் நம் பண்டைய இலக்கியங்களில் புதைந்திருக்கும் சகோதரத்துவம், மனிதநேயம், ஒழுக்கம், அன்பு, அருள் போன்ற உயரிய சிந்தனைகள் தற்காலத் தலைமுறைக்கு சென்று அடைய வேண்டிய காலம் கடந்து போய் கொண்டிருக்கிறது.நாம் விழித்துக் கொள்ள இதுவே சரியான தருணம். இனியும் காலம் தாழ்த்தாது செயல்படத் துவங்கிடுவோம். இதனால் நாம் தொழிற் கல்விக்கு எதிரானவர் என்று கொள்ள வேண்டாம்! தொழிற் கல்வியும் வேண்டும் தான்; அதனுடன் நம் தமிழ் இலக்கியங்களுக்கான உரிய மாண்பும், மரியாதையும் அளிக்கவும் பயிற்றுவிக்க வேண்டும். மானுடமும், தமிழினமும் தழைக்க வேண்டுமென இன்றே துவங்கிடவும் வேண்டும்.
வாழிய மானிடம் ! வாழிய தமிழ்மொழி!
ப.ராம் மோகன்,
எழுத்தாளர், துணை ஆணையர்,
மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை
இ-மெயில்: prmohan1969@yahoo.co.in