விவசாயிகள் தற்கொலை விவகாரம்:மத்திய அமைச்சரின் கருத்து திரிக்கப்பட்டுவிட்டது

ஜூலை.26, 2015:- விவசாயிகள் தற்கொலை குறித்த மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கின் கருத்து திரிக்கப்பட்டுவிட்டதாக மத்திய வர்த்தக, தொழில்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.
அந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதை அடுத்து பாஜக விவாதத்துக்கு ஒப்புக் கொண்டது.
இருப்பினும் எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சி விவாதம் செய்வதற்கு பதிலாக எதற்காக இந்த விவாதம் தேவை என்பது குறித்து விவாதிக்கலாம் என்று கூறுகிறது. இதிலிருந்து எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்தத் தயாராக இல்லை என்பது தெரிய வருகிறது.
தமிழகத்துக்கு அண்மையில் வந்த ராகுல் காந்தி, விவசாயிகள் தற்கொலை, மதுவிலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார். காங்கிரஸ் ஆட்சி நடத்தும் கர்நாடகத்தில் கடந்த 2 மாதங்களில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதும் அதனால் அங்கு நிலவும் கடினமான நிலைமை குறித்தும் தெரியாதவராக அவர் உள்ளார்.
தமிழகத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் இங்கிருந்து வெளியேறி வெளி மாநிலங்களுக்குச் செல்வதாக சிலர் தொடர்ந்து புரளியை கிளப்புகின்றனர். அவர்களின் கூற்றில் ஒருவேளை உண்மை இருந்தால் தொழில் நிறுவனங்கள் எந்த மாநிலத்துக்குச் சென்றுள்ளனர் என்ற புள்ளி விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து நாடாளுமன்றத்தின் நிலைக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ள அக்கட்சி உறுப்பினர்கள், அந்த சட்டத்தில் இருக்கும் எந்தெந்த அம்சங்களை மாற்றலாம் என்று பேசி வரும் நிலையில், அதே கட்சியினர் அந்த சட்டத்தை வர விடாமல் தடுப்போம் என்று நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசுகின்றனர். இதுபோன்ற இரட்டை நிலைப்பாடு நாடாளுமன்றத்துக்கே விரோதமாக உள்ளது.
தமிழகத்தில் அனைத்துக் கட்சியினரும் மதுவிலக்கு குறித்து பேசுகின்றனர். இருப்பினும் மதுவிலக்கு என்பது தேர்தல் விவகாரமாகவே இருக்கும். விவசாயிகள் தற்கொலை குறித்து மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கூறிய கருத்தை சிலர் தவறாக சித்திரிக்கின்றனர்.
பொதுவாக குற்ற ஆவணக் காப்பகத்தில் தற்கொலைக்கான காரணங்கள் குறித்த விவரம் இருக்குமே தவிர, விவசாயி தற்கொலை என்ற தலைப்பில் குறிக்கப்படுவதில்லை.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போது விவசாயிகளின் தற்கொலைக்கான காரணத்தை மட்டுமே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே அவர் கீழ்த்தரமாகப் பேசியதாகக் கருதக் கூடாது. ராதா மோகன் சிங் விவசாயத்தை புரிந்து கொண்டு பணியாற்றும் மூத்த அமைச்சர் என்றார் நிர்மலா சீதாராமன்.
பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா, மாநிலத் துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன்,முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி: பின்னர் மத்திய இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் சனிக்கிழமை தொடங்கிய நகரத்தார் சமூகத்தின் சர்வதேச வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு பேசியதாவது: ஒரு தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கு நம்பிக்கை, நாணயம், தொழில் தர்மம் ஆகியவை முக்கியம். இந்தத் தகுதியும் திறனும் நிரம்பிய இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்கிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாவிட்டால் அவர்கள் அரசுக்கு எதிராகப் போராடுவார்கள். எனவே அனைத்து இளைஞர்களுக்கும் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். அவர்கள் வங்கிகளால் ஏமாற்றம் அடைந்து விடக் கூடாது என்பதற்காக கடன் பெறுவதை எளிதாக்கியுள்ளோம் என்றார் அவர்.